தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் செயற்பாடுகள் மற்றும் அதன் தலைவர் விஜயின் பிரசார முறையை நடிகர் பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கட்சி வேட்பாளர்களை அறிவித்தும் அவர்களுக்கு ஆதரவாக, ஒவ்வொரு தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் சிபிஐ(எம்) வேட்பாளர் என்.பாண்டியின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய போது பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாவது,
“ஒரு திரைப்படத்தில் நீங்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ அல்லது முதலமைச்சராகவோகூட ஆகலாம்.
ஆனால், அரசியலில், எப்படி உடனடியாக முதலமைச்சராக ஆக முடியும்? என்னைப்போல நீங்கள் அரசியலைப் பற்றிப் பேசியிருக்கிறீர்களா?
மக்கள் பிரச்னைகளைச் சந்தித்தபோது அவர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் அல்லது மொழிக்காகவோ அதன் சுயமரியாதைக்காகவோ நீங்கள் துணை நின்றிருக்கிறீர்களா?
மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு, உங்கள் திறமைக்காகவே தவிர, உங்கள் அரசியலுக்காக அல்ல.
அதே அன்பை உங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்தலாம்.
மக்கள் வெயிலில் வரிசையில் நின்று, கட்-அவுட்களை வைத்து, டிக்கெட்டுகளை வாங்கி, தங்கள் வீடுகளையும் வேலைகளையும் புறக்கணித்து உங்கள் மீது அன்பு காட்டினார்கள்.
இப்போது நீங்கள் அதை உங்கள் அரசியல் பிரவேசத்திற்காகப் பயன்படுத்துகிறீர்களா? பாருங்கள், எனக்கு ஒரு நடிகரைப் பிடித்திருந்தால், என் தொண்டை கரகரக்கும் வரை நான் விசில் அடிக்கலாம்.
ஆனால், என்னால் அவர்களுக்கு இந்த நாட்டையே கொடுக்க முடியாது.
அரசியல் வேறு; சினிமா வேறு. அந்த அன்பு வேறு இந்தப் பொறுப்பு வேறு. ஒருவர் களத்தில் இறங்கிப் பேச வேண்டும்” என மறைமுகமாகச் சாடியுள்ளார்.





