ஈரான் அணு ஆயுதம் பெறுவதை அனுமதித்தால் உலகம் அழிந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
‘பொக்ஸ் பிசினஸ்’ ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்த அவர், ஈரானுடனான போர் ஒரு முடிவுக்கு வந்தவுடன், சர்வதேச சந்தையில் எரிவாயு விலையும், மின்சாரக் கட்டணமும் பெருமளவு குறையும் எனவும் உறுதியளித்துள்ளார்.
தற்போதைய பதற்றமான சூழல் தணிந்ததும் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம், “வரலாற்றிலேயே மிக மோசமான ஒப்பந்தம்” என ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடினார்.
இந்த ஒப்பந்தமானது ஈரான் மிக எளிதாக அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு ஒரு குறுகிய காலப் பாதையை அமைத்துக் கொடுத்தது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தகர்க்காமல் இருந்திருந்தால், ஈரான் தனது அணு ஆயுதங்களை இஸ்ரேல், அதன் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா மீது பயன்படுத்தியிருக்கும்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அந்தத் தற்காப்பு நடவடிக்கை பாரிய அழிவைத் தடுத்துள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரம், ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஷி, “சீனா அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை” எனத் தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஈரான் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியான நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும், அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணம் தமக்கு எப்போதும் இல்லை என்றும் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





