ரணிலின் அனுபவத்தைப் புறக்கணித்தால் இலங்கை மீண்டும் காலனித்துவமாகும்! – வஜிர அபேவர்த்தன

வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, நீண்டகால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் எனவும், நாட்டு மக்கள் அவரது ஆலோசனைகளையும் பிரயோசனங்களையும் பெற்றுக்கொள்ளத் தவறினால் நாடு மீண்டும் காலனித்துவ நிலைக்குத் தள்ளப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

காலியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த அரசுகளைப் போலவே தற்போதும் நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறுவதன் மூலம் தற்போதைய அரசு தனது தவறை ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த காலத் தவறுகளைத் திருத்துவதற்காகவே மக்கள் இந்த ஆட்சியைத் தெரிவு செய்தார்கள். எனவே, “முன்னைய ஆட்சியிலும் தவறு நடந்தது” என்று கூறி தற்போதைய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது.

நாட்டை முன்னேற்ற எமது காலத்தில் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைச் சட்டங்கள் தற்போது முற்றாக மீறப்பட்டு வருகின்றன. 1977ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தைப் போன்ற பல மடங்கு பெரிய மாற்றம் தற்போது நாட்டுக்குத் தேவையாக உள்ளது. மக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் கட்சிகளால் இத்தகைய பாரிய மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

50 ஆண்டுகால அரசியல் அனுபவம், பொருளாதார முகாமைத்துவத் திறன் மற்றும் சர்வதேச ரீதியிலான நன்மதிப்பு என்பன ரணில் விக்கிரமசிங்கவிடமே உள்ளன. அவரது அனுபவத்தை நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நாடு அந்நியச் சக்திகளுக்கு அடிபணியும் காலனித்துவச் சூழல் உருவாகும்.

ரணில் விக்கிரமசிங்க 2022இல் நாட்டைப் பொறுப்பேற்றபோது 400 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதியை, அவர் பதவியிலிருந்து விலகும்போது 290 – 295 ரூபா வரை குறைத்திருந்தார். அவர் வகுத்த பொருளாதாரத் திட்டத்தின்படி இன்று டொலரின் பெறுமதி 250 ரூபாவாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருந்தால் உலகளாவிய போர்ச் சூழல்களின் போது நாட்டின் பொருளாதாரம் இவ்வளவு பாதிப்படைந்திருக்காது.

ஆனால், இன்று டொலர் ஒன்றின் பெறுமதி 318 ரூபா வரை அதிகரித்துள்ளது. டொலரின் பெறுமதி ஒரு ரூபாவால் அதிகரித்தால் நாட்டின் கடன் சுமை 37 பில்லியன் ரூபாவால் உயரும். அந்த வகையில் தற்போது நாட்டின் கடன் தொகை 1.4 டிரில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இது 2 டிரில்லியனைத் தொடும்போது அரசு செயலிழந்துவிடும்.

இந்த அபாயகரமான சூழலைப் புரிந்துகொண்டு, எதிர்கால சந்ததியினருக்காக மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என இந்தப் புத்தாண்டில் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*